Take a fresh look at your lifestyle.

UNDP யின் சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை இலங்கையில் அறிமுகம்

1,063
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் UNDP, சர்வதேச மனித அபிவிருத்தி அறிக்கை HDR அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், அரசாங்க, பொது மற்றும் தனியார் துறை, அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் CSOs போன்றவற்றின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். 30 வருடபூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட மனித அபிவிருத்தி அறிக்கை 2020 இன் தலைப்பு ‘The Next Frontier: Human Development and the Anthropocene’ என்பதாக அமைந்திருந்ததுடன், இதில், புதிய சோதனை வழி சுட்டெண்ணான புவிசார் அழுத்தங்கள் – சீரமைக்கப்பட்ட மனித அபிவிருத்தி சுட்டெண் PHDI என்பது உள்ளடக்கப்பட்டிருந்தது. இது நாடுகளின் காபனீரொட்சைட் வெளியீடுகள் மற்றும் காபன் வெளியீடுகளில் கவனம் செலுத்துவதாக அமைந்திருந்தது. தெற்காசிய பிராந்தியத்தின் முன்னிலையை இலங்கை தன்வசப்படுத்தியிருந்ததுடன், உலகின் 169 நாடுகளில் 34 நிலைகள் முன்னேறி புதிய நிலையையும் எய்தியிருந்தது.

எம்மைச் சூழவுள்ள காணி மற்றும் சூழலின் இழப்பில் மனித அபிவிருத்தி என்பது வரலாற்று ரீதியில் இடம்பெற்றுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவல் என்பது, உலகம் எதிர்நோக்கியுள்ள பிந்திய இடர்நிலையாகும், மனிதர்கள் சூழலுக்கு ஏற்படுத்தும் அழுத்தம் குறையாதபட்சத்தில் இதுவே இறுதியானதாகவும் அமைந்திருக்காது என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் 189 நாடுகள் வரிசையில் இலங்கை 72 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 0.782 புள்ளிகள் எனும் உயர் மனித அபிவிருத்தியைக் கொண்டுள்ளது. ஆனாலும், தன்னிறைவுக்கு போதியளவு காலமில்லாமலுள்ளது. ஏனெனில், காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் வரிசையில் இலங்கை 6ஆம் இடத்தில் காணப்படுகின்றது. மனித அபிவிருத்தியுடன், புவியின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய ஒரு நிலையில் இலங்கை காணப்படுகின்றது.

மெய்நிகர் அறிமுக நிகழ்வின் போது அறிக்கையை பெற்றுக் கொண்டு, மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும குறிப்பிடுகையில், “உள்நாட்டு தொழில்முயற்சியாளர்களால் புதிய தொழிற்துறைகளை உருவாக்கக்கூடிய வகையிலான சூழலுக்கு நட்பான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் முயற்சி செய்கின்றது. புதுப்பிக்கத்தக்க வலு மூலங்களினூடாக, எம்மால் குறைந்த செலவிலமைந்த, குறைந்த காபன் வெளியீட்டிலான வலுவை பிறப்பிக்க முடியும். சூழலுக்கு நட்பான பொருளாதாரத்தினால், வலுப் பாதுகாப்பு, சூழல் மற்றும் பொது சுகாதாரம் போன்றன மேம்படுத்தப்படுவதுடன், அதிகளவு தொழில் வாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாகவும் இருக்கும். ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அவர்களின் சிந்தனைக்கமைய, எமது சகல அபிவிருத்தித் திட்டங்களிலும் சூழல் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்ய எம்மை அர்ப்பணித்துள்ளோம். சூழலுக்கு நட்பான பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஒழுங்கிணைப்பு நடவடிக்கைகளை நாம் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.” என்றார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி ரொபர்ட் ஜுகம் கருத்துத் தெரிவிக்கையில், “சூழலுக்கு நட்பான அபிவிருத்தி சிந்தனையில், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள சமூக-பொருளாதார தாக்கங்களை கவனத்தில் கொண்டு, தேசிய அபிவிருத்தித் திட்டமொன்றை வரையறுத்து செயற்டுத்துவதற்கு இலங்கைக்கு உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் தன்னை அர்ப்பணித்துள்ளது. சூழலுக்கு நட்பான அபிவிருத்தி வழிமுறையை எய்துவதற்கு அரசாங்கம், தனியார் துறை, சிவில் சமூகம், கல்விமான்கள், அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் எமது சக ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் தன்னை அரப்பணித்துள்ளது.” என்றார்.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒழுங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புவிசார் மற்றும் சமூக சமமற்றநிலைகள் தொடர்பான ஆழமான இணைப்பினூடாக, இந்த செயன்முறையின் அங்கமாக நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றேன். உலகின் எந்தவொரு நாடும் உயர் மனித அபிவிருத்தி மற்றும் குறைந்த புவிசார் அழுத்தத்தை எய்தியிராத நிலையில், சகல குரல்களுக்கும் செவிமடுக்கப்படும் பங்கேற்புடனான வழிமுறை ஒன்றை நாம் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறான வழிமுறையினூடாக மாத்திரமே எதிர்காலத்தில் காத்திருக்கும் சிக்கல்கள் நிறைந்த சவாலுக்கு முகங்கொடுக்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

மனித அபிவிருத்தியின் அடுத்த கட்டத்துக்கு, சமூக முறைமைகள், பெறுமதிகள் மற்றும் அரசாங்க மற்றும் நிதிக் கொடுப்பனவுகளை மாற்றியமைத்து, அதனூடாக இயற்கையுடன் ஒன்றித்து பணியாற்ற வேண்டிய தேவை காணப்படுகின்றது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹுல்டன் கருத்துத் தெரிவிக்கையில், “விவசாயம், கடற்றொழில் அல்லது சுற்றுலாத்துறை போன்ற பல வாழ்வாதாரங்களுக்கு இயற்கை மற்றும் சூழலில் இலங்கையர்கள் அதிகளவில் தங்கியிருப்பதாலும், உயிரியல் பரம்பல், காலநிலை மாற்றத்தினால் பாதிப்புக்குள்ளாகக்கூடிய தன்மை, இயற்கை மற்றும் சூழலில் தங்கியுள்ளமை போன்ற காரணிகளால் காலநிலை நடவடிக்கை என்பது இலங்கைக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. இலங்கையில் பணியாற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஐக்கிய நாடுகள் போன்றவற்றைச் சேர்ந்த எம்மைப் போன்றவர்களின் முக்கிய பகிரப்பட்ட இலக்கு, இலங்கை மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் சூழலை பேணுவது மற்றும் இயற்கை சார்ந்த தீர்வுகளினூடாக உயிரியல் பரம்பலை பாதுகாப்பது போன்றவற்றுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இணைந்து செயலாற்றுவதாகும்.” என்றார்.

இந்த அறிக்கையில், புவிசார் அழுத்தங்களை தணிப்பதனூடாக சகல மக்களுக்கும் சுபீட்சமாக வாழ்வதற்கு, அதிகாரங்களில் காணப்படும் சமத்துவமின்மைகளை நீக்கப்பட வேண்டியுள்ளதுடன், மாற்றத்துக்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெட்விங் சிம்பனியின் தவிசாளர் ஹிரான் குரே கருத்துத் தெரிவிக்கையில், “மனித அபிவிருத்தி தொடர்பில் உண்மையில் கவனம் செலுத்துவதுடன், சூழலுக்கு நட்பான பொருளாதாரத்துக்கு மாறும் முயற்சிகளை மேற்கொள்பவர்களாயின், நாம் சிந்திக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை முழுவதிலும் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதுடன், ஊக்குவிப்பும் வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

இந்த அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து “புதிய சமூக ஒப்பந்தம்: குறைந்த புவி அழுத்தங்களுடனான மனித அபிவிருத்தி” எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதில் இலங்கையின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கொள்கை மற்றும் ஈடுபாட்டு ஆய்வாளர் ராஷித் ரிசா வளவாளராக பங்கேற்றிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் அனன்டா சஸ்டெய்னபிள்ஸ் ஸ்தாபகர் சவீர வீரசிங்க, குளோபல் ஸ்ராட்டஜிக் கோர்பரேட் சஸ்டெய்னபிளிட்டி தவிசாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி. ரவி பெர்னான்டோ, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதி தலைமை அதிகாரி தோர்ஸ்டன் பிராக்பிரீட் மற்றும் சூழல் நீதிக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் / சிரேஷ்ட சூழல் விஞ்ஞானி ஹேமந்த விதானகே ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மேலும், தேசிய ஆங்கில நாளிதழின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சபியா அலி அலாம், இகோ-பிரென்ட்லி தன்னார்வ செயற்பாட்டாளர்கள் அமைப்பின் ஸ்தாபகர்/தலைவர் காஞ்சனா வீரகோன் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. கணேசமூர்த்தி முருகேசு தமது கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர். மனித அபிவிருத்தி அறிக்கை 2020 தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல பங்காளர்களுடனும் இணைந்து முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள தொடர் அமர்வுகளின் ஒரு அங்கமாக இந்த அறிக்கை வெளியிடும் நிகழ்வு மெய்நிகர் நிகழ்வாக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

2020 மனித அபிவிருத்தி அறிக்கை பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஆய்வை பார்வையிடவும் – சீரமைக்கப்பட்ட மனித அபிவிருத்தி சுட்டெண்ணுக்கும் www.lk.undp.org எனும் இணையத்தளத்தை பார்க்கவும்.

%d bloggers like this: