குருணாகலை அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருணாகலை நீதவான் நீதிமன்றால் குருணாகலை நகரசபை மேயர் உள்ளிட்டவர்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது.
குருணாகல் நகரசபை மேயர் துஷார சஞ்சீவ உட்பட 5 பேரை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை நேற்றைய தினம் வரையில நடைமுறைப்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த தினம் இடைக்கால தடையுத்தரவொன்றினை வெளியிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த ரீட் மனு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிபதிகளான எம்.எம்.டி நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்துள்ளனர்.
குருணாகலை புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருணாகலை நகர மேயர், நகர சபை ஆணையாளர் மற்றும் நகரசபையின் பிரதான பொறியியலாளர் உட்பட மேலும் இருவருக்கு எதிராக குருணாகலை நீதவான் நீதிமன்றத்தால் கடந்த தினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் படி பதில் பொலிஸ்மா அதிபரினால் குறித்த பிடியாணை பெறப்பட்டிருந்தது.
குருணாகலை நகர மத்தியில் அமைந்துள்ள 13 ஆவது நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி கடந்த ஜூலை 14 ஆம் திகதி உடைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தனக்கு எதிராக குருணாகலை நீதவான் நீதிமன்றால் வெளியிடப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை ரத்துச் செய்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி குருணாகலை நகரசபை மேயர் உட்பட 5 பேர் தாக்கல் செய்திருந்த ரீட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.