Take a fresh look at your lifestyle.

விஜயகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்! அடுத்தாண்டு நிச்சயம் சர்பிரைஸ் – பிரேமலதா

73

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று தனது 69-ஆவது பிறந்தநாளை, குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.

விஜயகாந்த் வீட்டில், வருடம் முழுக்க இலவசமாக சாப்பாடு போடுவார்கள். யார் அங்கு சென்றாலும், சாப்பாடு இல்லை என்ற வார்த்தையே இருக்காது. அரசியல் என்ட்ரி கொடுத்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் எனும் அந்தஸ்து வரை உயர்ந்தவர், அதன் பிறகு தனிப்பட்ட உடல்நலன் குறைபாடு காரணமாக ஒதுங்கியே இருக்கிறார்.

Vijayakanth Birthday, Captain Vijayakanthகுடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த்

எனினும், ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்தின் பிறந்தநாள் வெகுவிமரிசையாக தொண்டர்களால் கொண்டாடப்படும். விஜயகாந்தும் தனது பிறந்தநாளன்று ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அளிப்பார்.

அண்மைகாலமாக அவரது உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்காததால் அவரால் பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்ள முடியவில்லை.

மனைவி பிரேமலதா மற்றும் மகன்களுடன் விஜயகாந்த்

எனினும், விஜயகாந்தின் குரலில் இருக்கும் பிரச்சனை சரி செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் பழைய விஜயகாந்தாக கணீர் குரலில் பேச முடியும் என்று அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இதனால் தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாகமடைந்தனர்.

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குள், விஜயகாந்த் பூரண நலம் பெற்று வர வேண்டும் என்பதே அக்கட்சியினரின் ஒரே எதிர்பார்ப்பு, ஒற்றை குறிக்கோள்.

குடும்பத்துடன் செல்ஃபி மோடில் கேப்டன்

இந்த நிலையில் இன்று விஜயகாந்த் தனது பிறந்தநாளையொட்டி அவரது மனைவி பிரேமலதா மற்றும் இரு மகன்களுடன் வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடியுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

இதையொட்டி, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கொரோனா சூழலால் விஜயகாந்த் இந்தமுறை யாரையும் சந்திக்கவில்லை. அவரின் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். அடுத்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக இருக்கும். அப்போது அவர் உங்கள் அனைவரையும் சந்திப்பார். தேர்தலுக்கு இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது. இப்போ வரைக்கும் கூட்டணியில் தான் இருக்கிறோம். எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வது அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பதைக் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கும். ஆனால், தொண்டர்களின் விருப்பம் தே.மு.தி.க தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே.

தேசியக்கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர்மீது வழக்கு தொடரப்பட்டது. அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீதும் வழக்கு தொடரப்பட்டது. எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம்; ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா? முதன்முறையாக அறிவாலயத்தில் தேசியக்கொடி ஏற்றியிருக்கிறார்கள். அவர் உட்பட, அவருடன் இருந்த யாரும் கொடிக்கு மரியாதை செலுத்தவில்லை.

அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதுகூடத் தெரியவில்லை என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறேன். தேசியக்கொடிக்கு உரிய மரியாதை செலுத்தாமல் ஸ்டாலின் செல்வது சரியா? இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அ.தி.மு.க-வில் நடைபெற்றுவரும் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த விவாதம் தொடர்பான கேள்விக்கு, “அது அந்தக் கட்சியின் உட்கட்சி விவகாரம். நாட்டுக்கான பிரச்னை கிடையாது. எனவே, அதுபற்றி கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது” என்று பிரேமலதா பதிலளித்தார்.

கொரோனா விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துச் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, “எங்களைப் பொறுத்தவரை தமிழக அரசு சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது தமிழகத்துக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்னையில்லை.

உலகம் முழுவதும் யாரும் எதிர்பார்க்காமல், பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது கொரோனா வைரஸ். இந்த விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாகவே எடுத்துவருகிறது. இதுவரை இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது நல்லதுதான். இப்போது பாருங்க, இ-பாஸ் தளர்வு அறிவித்ததும், சென்னையை நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுக்கத் தொடங்கிவிட்டன. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைத்தால் தமிழகத்தைவிட்டு கொரோனாவை விரைவில் விரட்டிவிடலாம்” என்றார்.

%d bloggers like this: