அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதி பதவி ஏற்றபின்னர் கருப்பு இனத்தவர் மீது போலீசார் நடத்துகிற வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாய் நீளுகின்றன. அந்த வகையில் விஸ்கான்சின் மாகாணத்தில் கெனோஷா நகரில் பிளேக் என்ற கருப்பின வாலிபர் கடந்த 23-ந்தேதி இரவு போலீஸ் அதிகாரி ஒருவரால் ஏழு முறை சுடப்பட்ட சம்பவம், கருப்பு இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கியால் சுட்ட போலீஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும், தொடர்புடைய மற்ற அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கருப்பு இனத்தவர் 25-ந்தேதி நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.
இந்த போராட்டங்கள் போர்ட்லாந்து, ஒரேகான், மினியாபொலிஸ், மின்னசோட்டா உள்ளிட்ட பல நகரங்களுக்கு பரவி வருகின்றன. இந்த நிலையில், விஸ்கான்சின் மாகாண அட்டார்னி ஜெனரல் ஜோஷ் கவுல் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “முதலில் பிளேக்குக்கு எதிராக போலீசார் ஒரு டேசர் துப்பாக்கியை பயன்படுத்தினர். பிளேக், கார் கதவை திறந்தபோது, போலீஸ் அதிகாரி ருஸ்டன் ஷெஸ்கி, பிளேக்கின் முதுகில் 7 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். வேறு எந்த அதிகாரியும் தங்களுடைய துப்பாக்கியால் சுட வில்லை. பிளேக்கின் காரில் இருந்து போலீசார் ஒரு கத்தியை கைப்பற்றி உள்ளனர்” என கூறினார். இதற்கிடையே கொனாஷா நகரில் நடந்த சம்பவங்கள் பற்றி விசாரணை நடத்துவதற்கு 200 எப்.பி.ஐ. ஏஜெண்டுகளும், மத்திய போலீசாரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.